×

திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது மெட்ராஸ் பட பாணியில் சுவர் விளம்பரத்துக்காக கொலை: நீதிமன்றத்தில் 5 பேர் சரண்; முக்கிய குற்றவாளி தலைமறைவு

சென்னை:சென்னை பூக்கடை பேருந்து நிலையத்தில் ஜூஸ் மற்றும் பழ கடை நடத்தி வந்தவர் சவுந்தரராஜன் (59). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள் உள்ளனர். சவுந்தரராஜன் அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து வந்தார். அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற இருந்தது. அங்கு வைத்து 2 பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக சவுந்தரராஜனை தலையில் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியது.

உடனே சவுந்தரராஜன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சவுந்தரராஜனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்த்குமார் (22) என்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திமுகவைச் சேர்ந்த சவுந்தரராஜன் கடந்த வாரம் பூக்கடை பகுதியில் சுவர் விளம்பரம் செய்து கொண்டிருந்ததாகவும் வழக்கமாக அந்த சுவரில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் எழுதுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அதே போன்று இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டார். ஆனால், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்ததால் திமுக சார்பில் பிரமாண்டமாக தண்ணீர் பந்தல் ஏற்பாடுகளை செய்திருந்தார். அதன் அருகிலேயே சுவர் விளம்பரங்களையும் எழுதி இருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த கணேசன் என்பவர், ‘வழக்கமாக இந்த இடத்தில் நாங்கள் தான் சுவர் விளம்பரம் எழுதுவோம்’ என்று கூறியுள்ளார். அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இதுகுறித்து சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசனை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ், தினேஷ், கணேசனின் மைத்துனர் இன்பா மற்றும் சிலர் சேர்ந்து சம்பவத்தன்று சவுந்தரராஜனை வெட்டி கொலை  செய்ததாகவும் அதற்கு, வசந்த் குமார் துணையாக இருந்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வசந்த்குமாரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கணேசனின் மகன் சதீஷ் வழக்கறிஞராக உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கணேசன் அவரது மகன் தினேஷ் மைத்துனர் இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகிய 5 பேரும் நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கணேசனின் மகனும் வழக்கறிஞருமான சதீஷ்குமார் மட்டும் நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். ஒரு சுவற்றில் விளம்பரம் செய்ய மெட்ராஸ் என்ற படத்தில் நடக்கும் கொலை சம்பவம் போன்று பாரிமுனையில் நடந்த கொலை சம்பவமும் இருப்பதாக போலீசார் கூறினர்.

Tags : DMK ,Madras , One arrested in DMK official murder case Madras murder-style wall advertisement murder: 5 surrender in court; The main culprit is absconding
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்